எங்க காலனில மொத்தம் 90 வீடுகள். நாங்க இருந்தது M ப்ளாக்கில், முதல் மாடி. எங்க வீட்டுக்கு நேர் பின்னாடி H ப்ளாக். அதுல ரெண்டாவது மாடில காமினி வீடு. எனக்கும் அவளுக்கும் 8 வயசு வித்தியாசம். 90 வீட்டுல 30ல தான் ஆட்கள் இருந்தாங்க. அதுவும் 14 வயசுல ஒரு பொண்ணும் கிடையாது. இந்த பசங்க நம்மள விளையாட்டிலயும் சேர்த்துக்க மாட்டனுக. எனக்கு அந்த 8 வயசு பெரிய விஷயமா தெரியல. எனக்கு என்னோட சிடுசிடுக்கும் ராணி மிஸ்ஸும், அவங்க கட்டியிருந்த லோஹிப் சேலையை பத்தி சொல்லனும், அவளுக்கு அவ பாய்ப்ரென்ட பத்தி சொல்லனும். ரெண்டு பேருக்கும் ஒரு உயிருள்ள டைரி கிடைச்ச சந்தோஷம்.
அந்த முஸ்லிம் குடும்பம் வந்து இறங்கியப்போ நாங்க எங்க வீட்டுக்கு பின்னாடி இருந்த சம்பு மேல உட்கார்ந்து பேசிட்டிருந்தோம். மூட்டை, முடிச்சு இறங்கிய பத்தாவது நிமிஷம், அந்த வீட்டுல இருந்த ரெண்டு பசங்க விளையாட ஓடிடானுங்க. எனக்கு சிரிப்புதான் வந்தது. எப்படி தான் இப்படி பைத்தியமா இருப்பாங்களோ? அவங்க குடி வந்தது H ப்ளாகில் முதல் வீடு. என்னோட ரூம் ஜன்னல் வழியா அவங்க வீட்டு வாசல் தெரியும். ஒரு வாரத்தில் காமினி கண்டுபிடித்தது : அந்த வீட்டூல 2 பசங்க, 2 பொண்ணுங்க. ஆனா மூத்த பையனுக்கு தான் என்னோட வயசு. மத்தவங்க எல்லாம் ரொம்ப சின்ன பசங்க. சரி, இந்த தடவையும் நமக்கு செட் சேராதுபோலனு தோணிச்சு.
என் வாழ்க்கை எப்போதும் போல சுமூகமா போச்சு, அந்த வயத்துவலி வரவரைக்கும். செத்து போன மாதிரி இருந்தது. வீட்டுல ஒரே கொண்டாட்டம். நான் குமரியாய் மறுபிறவி எடுத்திருக்கேனு சொன்னாங்க. எனக்கு இந்த மாற்றமும் பிடிக்கலை, அதோட வந்த கெடுபிடியும் பிடிக்கலை. 6 மணிக்குமேல வெளிய போகாதே! தனியா சுத்தாதே! சத்தமா பேசாதே! சே! இப்படினு தெரிஞ்சுருந்த, நான் காமினி மாதிரி பெரிய பொண்ணாகிறதுக்கு அவசரபட்டிருக்க மாட்டேன். இன்னும் கொஞ்ச நேரம், சம்புமேல உக்கார்ந்திருப்பேன்.
இந்த ஆதங்கம் ஒரு பக்கம் இருக்க, காமினி என்னை ஒரு புதிய உலகத்துக்கு கூட்டிட்டு போனா. ஒரு பெண் தன்னை அழகாகிக்க எவ்ளோ செய்ய வேண்டியிருக்கு? ஒரு சின்ன நூல் வச்சு, ஒவ்வொரு புருவ முடியும் புடுங்கறது, யப்பா! சொல்லி மாளாது அந்த வலி. பட்டா தான் புரியும். அப்புறம், 'வேக்ஸ்ஸிங்'! வலி தாங்காம கத்திட்டேன். பட்டு தோலுக்கு, இன்னும் எவ்ளோதான் படனுமோ? இவ்வளவு பண்ணியும், "மாசரு பொன்னே"னு ஒருத்தரும் என்னை பார்த்து பாடலை.
இப்படியே ஒரு வருடம் கழிந்தது. நானும் என்னோட புது வாழ்க்கையும் ஒரு வழியாக ராசி ஆயிட்டோம். ஒரு நாள் படிச்சு முடிச்சி, ஜன்னல் கதவை அடைக்கும் போது தான் அவனை பார்த்தேன். பின் வீட்டு முஸ்லிம் பையன். அவங்க வீட்டு பால்கனியில் பேப்பர் படிச்சுட்டிருந்தான். ராத்திரி 11 மணிக்கு. நான் அவனை பார்த்த நேரம், அவனும் என்னை பார்த்துட்டுதான் இருந்தான். இது வரைக்கும், வெறும் "அந்த முஸ்லிம் பையன்" ஆக இருந்த நிழலுக்கு முதல் தடவையா ஒரு உருவம் குடுக்க முடிஞ்சது. அந்த உருவம் எனக்கு பிடிச்சும் இருந்தது.
அதற்குபின், நான் எப்போ என் ரூமுக்கு போனாலும் என் ஜன்னல் வழியா ஒரு நோட்டம் விடுவேன், அந்த அழகான கண்கள் என்னை பார்க்குதானு தெரிஞ்சுக்க. அவனுக்கு நான் அழகா தெரிஞ்சேனானு எனக்கு தெரியாது. அவன் பேர் தெரியாது. அவனோடு பேச முயன்றது இல்லை. ஏன், தெரிஞ்ச மாதிரி சிரிச்சதுகூட கிடையாது.
ஆனா, அந்த முதல் பார்வை பரிமாற்றம் ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்கி வச்சுது. அது வரைக்கும் வீட்டின் கடைக்குட்டி தான் கதவை திறப்பாள். ஆனா இவன் ஒடி வர அரம்பித்தான். ஆச்சர்யமாய் அவன் தங்கை பார்க்க, இவன் கண்ணில் சிரிப்போடு, நிதானமா உள்ளே செல்வான். எங்க வீட்டிலோ, எப்பவும் டீவி முன்னாடி படிக்கிற பொண்ணு இவ்ளோ சமத்தா ரூமில படிக்கறாளேனு பூரிப்பு.
தோழிகள் கிண்டல் செய்ய, எங்கள் கண் சம்பாஷனை தொடர்ந்தது. ஒரு முழு வருடத்துக்கு. அவன் பேசாத கவிதைகள் என் டைரி பக்கங்களை நிரப்பின. அந்த ஒரு வருடம் நான் கேட்ட ஒரே பாடல்
"கண்ணாளனே, எனது கண்ணை நேற்றோடு காணவில்லை". அது வரைக்கும் லூசா தெரிஞ்ச பையன், ஒரு புது வெளிச்சதுல, சகலகலா வல்லவன் கமல் மாதிரி மோட்டர் பைக்கை அனாயசமா என் மனசுக்குள்ள ஓட்டிட்டு வந்துட்டான்.
இப்ப நினச்சா சிரிப்பு வருது, ஆனா அன்னிக்கு அந்த தேடல், ஒரு இனம் புரியாத சந்தோஷத்தை தந்தது. அம்மா, அப்பா பேச்சை மீறல, எந்த பெரிய கனவும் காணாம, என்னோட சின்ன உலகத்துல நான் படைத்த சின்ன காவியம்.
அந்த கனா காலம் முடிஞ்சதுக்கப்புறம், ரெண்டு பேரும் பேசினோம். பப்ளிக் எக்ஸாம்க்கு எங்க டூஷன் போனும், எந்த கைடு நல்லது, யாரோட டீச்சர் நல்லா சொல்லி தராங்கனு நிறைய
முக்கிய விஷயங்களை முக்கி முக்கி பேசினோம். நாளடைவுல ரொம்ப நல்ல நண்பர்கள் ஆனோம். என்னோட டைரில என்ன எழுதினேனு அவனும், ஏன் கதவுக்கு பின்னாடி இருந்து, ஒரு சின்ன இடுக்கு வழியா என்னை பார்த்தான்னு நானும் தெரிஞ்சுக்காமலே வளர்ந்துட்டோம்.
***********
பின்குறிப்பு - "வளர்சிதை மாற்றம்" -
தேன்கூடு இந்த மாதப் போட்டிக்கான பதிவு இது. முதல் தடவை ஒரு தமிழ் போட்டிக்கு எழுதறேன், நீங்க வோட்டு போடறீங்களோ இல்லையோ, எவ்ளோ சுமார்னு ஒரு சின்ன பின்னூட்டமாவது இடுங்க. டான்க்ஸ் :)